புலவர். ஆ.பழநி – ஓர் அறிமுகம்
அய்யா திரு. ஆ.பழநி அவர்கள் 7.11.1931 அன்று ஆண்டியப்பன் – உமையாள் தம்பதியினருக்கு ஒன்பதாவது மகனாக காரைக்குடியில் பிறந்தார். ஐந்தாம் வகுப்புடன் பள்ளிப்படிப்பை முடித்துக்கொண்ட இவர், வட்டிக்கடை, துணிக்கடை, பெட்ரோல் விற்பனை நிலையம், பல்பொருள் அங்காடி எனப் பல இடங்களில் வேலை செய்து இறுதியாக குடும்பத்தொழிலான வேளாண்மையில் இறங்கினார். வட்டிக்கடை முதல் வயல்வெளித் தொழில் வரை ஈடுபட்டிருந்த காலகட்டத்தில் கண்டது கற்கும் தொழிலையும், கற்றவற்றைச் சிந்திக்கும் இயல்பையும் கை விடாமல் பற்றிக் கொண்டிருந்தார். 1950களில் தமிழர் உள்ளங்களில் விழுதை இறக்கிய திராவிட இயக்கம், கற்பதும் சிந்திப்பதும் இரு கண்ணெனக் கொண்ட அய்யா அவர்களை தன்வயப் படுத்திக்கொண்டது. படிக்கும் ஆர்வத்தைத் தூண்டியது; சிந்தனையைக் கூர்மைப்படுத்திச் செழுமைப்படுத்தியது. திராவிட நாடு, போர் வாள், திராவிடன் போன்ற ஏடுகளை வேதப்புத்தகங்களாகவே கருதிப் படித்த ஐயா அவர்களை மீட்ருவாக்கம் செய்ததில் இவ்வேடுகள் கணிசமான பங்காற்றின. இதன் விளைவு தமிழ் மீது, தமிழ் இனத்தின் மீது, தமிழ் இலக்கியங்களின் மீது ஆராக் காதலாக உருமாறியது. தமிழ் இலக்கியங்களைக் கற்கும் நோக்கில் மேலைச்சிவபுரி, கணேசர் செந்தமிழ்க் கல்லூரியில் சேர்ந்தார். கல்லூரி இறுதியாண்டில் (1959) வால்குடல் அழற்சிநோய், வால்குடல் நீக்கப்பட்டவுடன் நுரையீரலில் கட்டி, அதன் தொடர்ச்சியாக ஒரு பக்க நுரையீரல் இழப்பு எனப் பல இன்னல்களைக் கடந்து, சாம்பலில் இருந்து உயிர்த்தெழும் ஃபீனிக்ஸ் பறவையைப் போல, 1962ல் புலவர் பட்டம் பெற்றார். 1964ஆம் ஆண்டு முதல் காரைக்குடி மீ.சு. உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்தார்.1997ல் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் பேரவை உறுப்பினராகவும் பணி புரிந்துள்ளார். நாடகம், உரை, திறன்நூல், காப்பியம், ஒப்பீட்டு நூல் எனப் பல நூல்களை எழுதியுள்ளார். தமிழ் இலக்கியத்தின் பல்வேறு தளங்களில் இயங்கிய அய்யா அவர்கள் பல்வேறு பரிசுகளும், விருதுகளும் பெற்றுள்ளார்.
அய்யா திரு. ஆ.பழநி அவர்களின் நூல்கள்:
- அனிச்ச அடி (1973)– நாடகம்
- அன்னிமகள் – நாடகம்
- பண்டித மணியின் நாடகத்தமிழ் (1983) – திறன்நூல்
- சாலிமைந்தன் (1985) – காப்பியம்
- பாரதிதாசன் பாரதிக்கு தாசனா? (1989) – ஒப்பீட்டு நூல்
- கானல் வரியா ? கண்ணீர் வரியா ? (1990) – திறன்நூல்
- இளங்கோவடிகளின் காப்பியக் கலைத்திறன் (1991)
- கோவலன் வீழ்ச்சியும், இளங்கோ மாட்சியும் (1991)
- சிலம்பில் சில மறைப்புகள் (1993)
- களம்கண்ட கவிதைகள் (1993)
- பாண்டியன் பரிசில் வரலாற்றுப் பார்வையும் குறியீட்டுச் செய்தியும் (1994)
- கம்பன் காட்டும் போரற்ற உலகம் (2004) – திறன்நூல்
- காரல் மார்க்சு காப்பியம் (2005)
- சிலப்பதிகாரக் காப்பியக் கட்டமைப்பு (2007)
- திருக்குறள் உரைகளும் சில குறைகளும் (2009)
- கம்பரின் மறுபக்கம் (2017)
- மாணிக்கனாரின் கவிதைத் தமிழ் (2017)
- பழந்தமிழர் வாழ்வில் காதல் (2019)